|
எழுத்தாளர்
சுஜாதா மறைவு
பிரபல
எழுத்தாளரும் அம்பலம் ஆசிரியருமான சுஜாதா சென்னையில் புதனன்று இரவு
காலமானார். அவருக்கு வயது 72. சில காலமாகவே சிறுநீரக மற்றும் இருதய
கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு சென்ற வாரத்தில் உடல்நிலை
மோசமானதால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி புதன் இரவு (27.02.2008)
9.20 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. அவரின் இறுதிச் சடங்குகள்
வெள்ளியன்று நடைபெற உள்ளது.
1935ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தார்.
தனது இளமைக் காலத்தை திருச்சி
ஸ்ரீரங்கத்தில்
தொடங்கிய இவர், ஸ்ரீரங்கம்
ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தனது
இயற்பியல் (B.Sc) படிப்பை முடித்தார். அவருடன் அப்போது படித்தவர்
முன்னாள் குடியரசுத்
தலைவர் அப்துல் கலாம். பிறகு சென்னைக்கு வந்த அவர் எம்.ஐ.டியில் பி.இ.
எலக்ட்ரானிக்ஸ் படிப்பை முடித்தார். அதன் பின்னர் டெல்லியில் மத்திய
அரசுப் பணியில் சேர்ந்தார். 11 ஆண்டுகள் அங்கு பணிபுரிந்த இவர், பின்னர்
பெங்களூர் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றினார்.
பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின் சென்னை வந்த அவர் தனது மனைவி
சுஜாதாவின் பெயரால் கதைகள் எழுத ஆரம்பித்தார். ஆரம்பத்தில் கணையாழியில் ஸ்ரீரங்கம்
எஸ்.ஆர். என்ற பெயரில் பல வருடங்களாக இவர் எழுதி வந்த 'கடைசி பக்கம்'
வாசகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குமுதம், ஆனந்த விகடன், தினமணி
கதிர் போன்ற பத்திரிகைகளின் மூலம் எண்ணற்ற வாசகர்களை விசிறிகளாக
பெற்றார்.
தனது எளிய உரைநடையில் அறிவியலை மக்களிடையே பிரபலபடுத்தியதற்காக
என்சிஎஸ்டிசி (NCSTC-Department of Science & Technology) இவருக்கு
தேசிய விருது வழங்கி கௌரவித்தது. இவர் எழுதிய 'ஏன் எதற்கு எப்படி? என்ற
அறிவியல் தொடர்பான கேள்வி-பதில் அடங்கிய புத்தகம் வரலாற்றிலேயே 50000
பிரதிகள் விற்று சாதனை புரிந்தது. மேலும் இணையம் (Internet) பற்றியும்,
திரைக்கதை எழுதுவது எப்படி என்பதை பற்றியும் இவர் எழுதிய புத்தகங்கள்
பல பிரதிகள் கண்டன.
இவர் 50க்கும் மேற்பட்ட நாவல்களையும், 200 சிறுகதைகளையும் 10
நாடகங்களையும், 15 அறிவியல் கட்டுரைகளையும் ஒரு கவிதை தொகுப்பையும்
எழுதியுள்ளார். இவரின் எழுதிய நாவல்களான கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா,
காயத்ரி போன்றவை திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. இவர் எழுதிய நாடகங்கள்
பலமுறை மேடையேறியுள்ளன. அறிவியல் புனைக்கதைகளை தமிழில் எழுதி அவற்றின்
முன்னோடியாக இருந்தார். இவர் கதைகளில் கணேஷ்-வசந்த் என்ற பெயரில் வரும்
கதாபாத்திரங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. இவர் படைப்புகள் அனைத்தும்
எளிய தமிழில் இருந்ததால் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இன்று நாம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு
முக்கிய காரணம் சுஜாதா அவர்கள்தான். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்
குழுவின் தலைவராக அவர் பொறுப்பேற்றிருந்தார். இந்த இயந்திரத்தை
உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் (VASVIK) விருது வழங்கி
கௌரவிக்கப்பட்டது. இவருடைய எழுத்துப் பணியைப் பாராட்டி தமிழக அரசின்
கலைமாமணி விருதும் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இவர் முதலில் வசனம் எழுதிய படம் 'விக்ரம்'. பிறகு ரோஜா,
இந்தியன், முதல்வன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், செல்லமே, அந்நியன்,
சிவாஜி உள்பட பல வெற்றிப் படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார்.
தயாரிப்பில் உள்ள 'ரோபோ' படத்திற்கான வசனங்களையும் இவர்
எழுதி வந்தார்.
ஸ்டெர்லிங் இன்போடெக் மற்றும் பென்டா மீடியா நிறுவனங்களின் ஆலோசகராக
பணிபுரிந்தார். லினக்ஸ் தமிழ் கணினி குழுவில் உறுப்பினராக இருந்து கணினி
சம்பந்தப்பட்ட வார்த்தைகளை தொகுத்தளித்துள்ளார்.
அம்பலம்.காம் இதழுக்காக இவர் ஓரிரு எண்ணங்கள், வாரம் ஒரு பாசுரம் போன்ற
தொடர்களை எழுதி வந்தார். வாரம் ஒரு பாசுரம் 71 வாரங்களோடு முழுமை
பெறாமல் நின்றுவிட்டது.
சுஜாதா அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத
பேரிழப்பாகும். |